அனாதையான கல்முனை மாநகரசபையும் ,தேவைக்கு வரும் அரசியல் வியாபாரிகளும்

அமைச்சர் ஹக்கீமின் அண்மைய போக்குகள்...
நான் சொல்ல வேண்டியுள்ள சில செய்திகள்!
----------------------------------------------------------------------------
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை நகரம் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் தான் பேசியிருப்பதாகவும் அண்மையில் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
பிரதமர் ரணில் இவ்வாறு கூறியிருப்பது ஒரு புறத்தில் நல்லதாக இருந்தாலும் மறுபுறத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிகள்தான் என்ன என்ற கேள்விகளையும் எழுப்பாமல் இல்லை. சகல அதிகாரங்களையும் கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சரான ரவூப் ஹக்கீம், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை நகரத்தை அபிவிருத்தி செய்ய சுயமாக முயற்சிக்கவில்லையா என்றதொரு நியாயமான சந்தேககம் என்னுள் எழுந்துள்ளது.
கல்முனையை அபிவிருத்தி செய்ய பிரதமரே விருப்பம் கொண்டு அமைசச்ர் ஹக்கீமுடன் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதான் காரணமாகவே இந்தக் கேள்வி என்னுள் எழுந்துள்ளது. எனவே இது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகவே நான் கருதுகிறேன்.
புதிய நல்லாட்சி அமைக்கப்பட்ட பின்னர் அமைச்சர் ஹக்கீமை ஏனைய சில அமைச்சர்களுடன் ஒப்பிடுகையில் திட்டங்களை உருவாக்குவதிலும் அதனைச் செயற்படுத்துமாறு உத்தரவிடுவதிலும் அவர் முன்னிலையில் நிற்கிறார் என்பதனை மறுக்க முடியாது. ஆனால், செயற்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள அபிவிருத்திகள் என்ற விடயத்தில் அவர் மிகவும் பின் தங்கியுள்ளார் என்ற உண்மை சிலவேளைகளில் பலருக்கும் கசப்பாக இருக்கலாம்.
சஜித் பிரேமதாச, டி.எம் சுவாமிநாதன் லக்ஷ்க்மன் கிரியெல்ல, கருஜயசூரிய, ராஜித சேனாரத்ன, ஹலீம், ரிஷாத் பதியுதீன் போன்ற பல அமைச்சர்கள் தங்கள் அமைச்சின் ஊடாக பல விடயங்களை இன்று செய்து காட்டிவிட்டனர். ஆனால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிகள் இன்னும் உத்தரவுகளாகவும் கண்டால் ஆம், சரி என்று கூறுவது போன்ற நிலையிலுமே காணப்படுகிறது. இந்த விடயத்தில் அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
மஹிந்தவின் ஆட்சியில் தான் அமைச்சராக இருந்தாலும் ஒரு குண்டூசியைக் கூட தூக்கி வைக்கவும் ஒரு சிற்றூழியரை நியமிக்கவும் தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய அமைச்சர் ஹக்கீமின் காட்டில் தற்போது மழை பெய்கிறது. எதனை அவர் தீர்மானிக்கிறாரோ அதனைச் செய்யவும் செய்யாமல் தடுக்கவும் கூடியதான முழு அதிகாரங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடயத்தில் இனி அவரால் மற்றவர்களைக் குற்றஞ் சொல்ல முடியாது. ஏற்படக் கூடிய தவறுகளுக்கு தனியனாக நின்று பொறுப்புக் கூற வேண்டியதும் அவரே தவிர, ஜனாதிபதியோ பிரதமரோ ஏன் முழு அரசாங்கமோ அல்ல என்பதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னர் அவரால் அமைச்சுகளுக்கு அதிகாரிகளையோ ஊழியர்களையோ நியமிக்க முடியாத நிலைமையும் காணப்பட்டது உண்மையே. ஆனால், இன்று அவ்வாறில்லை. அவர் அனைத்தையும் செய்து கொள்ளக் கூடிய ஒரு நிறைவேற்று அதிகார அமைச்சர். ஆனால் இந்த விடயத்தை என்றால் அவர் கச்சிதமாகச் செய்து வருகிறார் என்றுதான் நான் கூறுவேன். தனது அமைச்சின் ஆளுமைக்கு உட்டப்ட நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு அரசியல் ரீதியான நியமனங்களை அவர் தாராளமாகச் செய்து வருகிறார் நல்லதுதான். ஆனால் அதிலும் அவர் நியாயமாக நடப்பதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கொண்டு ஆண்டாண்டு காலமாக அனைத்தையும் அனுபவிக்கும் ஒரு சிலருக்கே அனைத்தையும் வழங்கி வருகிறார். இது ஒரு தவறான நடவடிக்கை. அந்தக் கட்சிக்காக பல தியாகங்களைச் செய்தவர்களும் கட்சியின் தொண்டர்களும் இப்போதும் இருக்கிறார்கள். அவர்களை மர்ஹும் மாமனிதர் அஷ்ரஃபின் ஆட்கள் என்ற காரணம் உட்படலாக பலவற்றுக்காக ஒதுக்காமல் அனைவரையும் அணைத்துச் செல்ல வேண்டியது அமைச்சர் ஹக்கீமின் பொறுப்பு. இந்த விடயத்தில் சுய புத்தியில் இயங்க வேண்டும். கேட்பார் சொல் கேட்டு கெட்டு விடக் கூடாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், கல்முனைக்குடியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத் மரிக்கார், சட்டத்தரணி அபுல்கலாம் போன்று இன்னும் டசன் கணக்கானோர் நாடளாவிய ரீதியிலிலும் புலம்பெயர்ந்தும் வாழ்கின்றனர். இவ்வாறானவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒதுக்கப்பட்டதால் ஒதுங்கிப் போயுள்ளனர். இவ்வாறானவர்கள் கட்சிக்காக செய்த பங்களிப்பு, தியாகங்கள் இப்போதுள்ள சில கோள்மூட்டிகளுக்கும் கூட்டிக் கொடுப்போருக்கும் தெரியாது. அளப்பரியன. ஆனால் இவைகள் இன்று சிலாரல் மறைக்கப்பட்டு மக்கள் மனதில் மனதிலிருந்து மறக்கடிக்கப்படுகின்றன. உண்மையில் அவர்களை அணைத்தெடுத்து அவர்களுக்கரிய கௌரவத்தை வழங்க வேண்டும்.
அண்மையில் அமைச்சர் ஹக்கீம் அவர்களால் வழங்கப்பட்ட பொறுப்பு வாய்ந்த பதவிகள் சிலருக்கு எந்த வகையிலும் பொருத்தமற்றாக இல்லை என்றே நான் உணர்கிறேன். அதாவது குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போன்றுதான். சிலர் ஏலவே பதவியில் இருக்கும் நிலைியல் இன்னுமொரு பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட “சன்மானத்துக்கான“ அர்த்தம் கூட எனக்குப் புரியவில்லை.
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Comments

Popular posts from this blog

தென் கிழக்கு சமூக நல அமைப்பு ( ‪#‎SEWA‬ ) நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவும் வகையில் பொருட்கள் கையளிப்பு